Sunday, 24 April 2016

பணம்

   வாழ்கையில் மிக முக்கியம் என்று கேட்டால் பல பேர் சொல்லுவர் நிம்மதி என்று.. வாழ்கையில் அடி பட்டவர்களை கேட்டால் அவர்கள் சொல்லும்  ஒன்று "பணம்". பணத்திற்கு இப்பொழுதுதான் மதிப்பு வந்து விட்டதாக  நாம் நினைக்கிறோம். இல்லை பழைய காலத்திலிருந்தே இந்த பணம் நமது வாழ்கையில் அங்கமாகி இருக்கிறது என்று சொல்வதை விட  முக்கியமானதாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.  "பணம் பத்தும் செய்யும்", "பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும்" என்ற பழமொழிகள் அன்றைய காலத்திலும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
     " கள்ளதானும் கைப்பொருள்  கொண்டு வந்தால் எல்லாரும் வந்து எதிர்கொள்வர் , இல்லாதானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் " என்று அவ்வையார்  பாடினார். ஆகவே அன்று முதல் இன்று வரை பணம் ஒரு முக்கியமானதாகவே இருந்து வருகிறது. பாசம் பணத்தை விட உயர்ந்தது தான் இருப்பினும் பணம் இல்லாமல் ஒன்றும் இல்ல இந்த உலகத்தில்.
     பணம் இருப்பவனுக்கு மரியாதையை எவ்வளவு என்று நம் வாழ்கையில் கண்கூடாக நாம் பார்க்கிறோம். பணக்காரன்  அவனிடம் இருக்கும் பணத்தை நம்மிடம் கொடுக்கப்போவதில்லை இருப்பினும் அவனுக்கு இருக்கும் மதிப்பே தனி. இல்லை என்று எவரேனும் மறுக்க முடியுமா. மகிழ்வுந்தில் செல்லும் ஒருவனுக்கு கிடைக்கும் மரியாதையை இரு சக்கர வாகனத்தில் செல்பவனுக்கு கிடைப்பதில்லை.
    அந்த பணத்திற்காக  பலவற்றை இழந்து  நிறைய மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
     

Saturday, 2 April 2016

இயந்திர வாழ்க்கை

                         இந்த தலைமுறை வாழ்க்கையை பற்றி கேட்டால் அனைவரும் சொல்லும் ஒரே பதில் "இயந்திர வாழ்க்கை". ஆம் நாம் அனைவரும்  வாழ்ந்து கொண்டிருப்பது  இயந்திர வாழ்க்கை தான். முன்னொரு காலத்தில் பஞ்சம் வரும் பொழுது  அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இடம் பெயர்வதுண்டு .  ஆனால் இப்பொழுது அனைவருமே  இடம்பெயரவேண்டியுள்ளது. ஏன் இப்படி ஆகி விட்டது நம் வாழ்க்கை .
                       பிறந்த ஊரை விட்டு வேறு ஊர் சென்று நாம் வாழ்ந்தாக வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுவிட்டோம். அதற்கான காரணம் ஒவ்வுருவருக்கும் வேறுபடும். ஆனால் அனைத்து காரணங்களுக்கும் இருக்கும் மூல காரணம் "பணம்". எதோ ஒரு விதத்தில் அந்த பணத்தை தேடி நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம் . அந்த தேடலில் நாம் தொலைத்தவை ஏராளம். பணத்திற்காக  இடம் பெயர்ந்த நாம் எதோ ஒரு காரணத்திற்காக  திரும்பி வர முடியாமல்  மாட்டிகொண்டிருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

Wednesday, 10 February 2016

காலம்

நாம் அனைவரும் எதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று யாருக்காவது தெரியுமா?
             நமது வாழ்க்கை  எங்கு சென்று கொண்டிருகிறது ...நாம் எதன் பின் செல்கின்றோம்?
             நாம் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் நேரம் என்பது சென்று கொண்டே இருக்கும்.  இந்த நேரத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள  நாம் அனைவரும் ஒரு இலட்சியத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.
           இலட்சியத்தை வாழ்கையின் அங்கமாக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். அந்த லட்சியத்தில் நாம் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பது நமது குறிக்கோளல்ல. லட்சியத்தோடு பயணிக்கிறோம என்பதுதான் குறிக்கோல்.
           அது சரி , லட்சியம் இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும். வாழ்க்கை  எப்பொழுதும் போல சென்று கொண்டிருக்கும் அல்லவா என்று சில கேள்வி எழும். ஆம் லட்சியம் இல்லாவிட்டாலும் வாழ்க்கை  பயணம் சென்று கொண்டிருக்கும். ஆனால் ஒரு நாள் நாம் திரும்பி நமது வாழ்க்கையை பார்த்தல் எதுவுமே இல்லாமல் போய்விடும். அப்பொழுது வருத்தப்பட்டு ஒன்றும் ஆகா போவதில்லை . திரும்பி ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வி கூட எழும்.
           நடந்து வந்த பாதையை நினைவு கூறுவது எவ்வளவு சுகம் என்று உணர்ந்தவர்களுக்கு புரியும்.அந்த சுகத்தை உணர கஷ்டம் தேவை.
 லட்சியம்  இருந்தால் தான் கஷ்டம் தெரியும் கஷ்டம் தெரிந்தால் தான் சுகம் என்ன என்று தெரியும் .அந்து சுகத்தை  உணர முடியும்.
           எடுத்துக்காட்டாக ஒரு  நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம். நடந்து சென்று கொண்டிருக்கிறோம் , அப்பொழுது தாகம் எடுக்கிறது , உடனே பக்கத்தில் தண்ணீர் இருக்கிறது , அதை அருந்துகிறோம். நமது தாகம் தீர்ந்து விடுகிறது.
           ஒருவேளை தண்ணீர்  அங்கு இல்லாமல் இருந்தால். தண்ணீருக்காக அலைந்திருப்போம் . அப்படியும் தண்ணீர் கிடைக்காமல் இருந்தால் தாகம் மேலோங்கி இருக்கும். நீண்ட தேடுதலுக்கு பின்பு தண்ணீர் கிடைத்தால் அப்பொழுது அந்த தண்ணீரின் சுவையே வேறு அல்லவே?
      அது போலத்தான் கஷ்டம் இருந்தால் தான் சுகத்தின்  அருமை தெரியும். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும்.

அர்த்ததோடு வாழ்வோம் வளர்வோம்.

நன்றி.....
           

Tuesday, 9 February 2016

முன்னுரை

    அன்பான தமிழ் சொந்தங்களே , அனைவருக்கும் என் இனிய வணக்கம்,வலையில் உங்களுடன் இணைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய நீண்ட நாள் ஆசை தமிழில் வலைபதிவு செய்ய வேண்டும் என்று.அது இன்று நிறைவேறுகிறது என்று சொல்வதை விட தொடங்குகிறது என்று சொல்ல வேண்டும்.
 வாழ்க்கை அனுபவங்களை  இந்த வலைபதிவில் உங்களுடன் பகிர இருக்கிறேன்
               இந்த வலைப்பதிவை அடுத்த  நிலைக்கு  கொண்டு செல்ல முயற்சி மேட்கொள்வேன்.

 நன்றி